நக்கீரன்
நாட்டின் ஐந்தாவது மாமன்னராகவும் 14ஆவது மாமன்னராகவும் விளங்கிய பெருமை மேன்மைசால் சுல்தான் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாட்ஷாம் ஷா அவர்களையேச் சாரும்.
இயற்கை வளமும் எழில் நயமும் மக்கள் நலமும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற இம்மலைத்திருநாட்டிற்கு பெயர் தந்தது தமிழ் மொழி; அது மட்டுமல்ல, பண்பாட்டு மேன்மையையும் நாகரிகச் சிறப்பையும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கும் முன்னம் இத்திருநாட்டிற்கு இறக்குமதி செய்தது குமரிக்கடல்.
பஃருளுளி(குமரி) ஆறு நடுவேப் பாய்ந்து மண்ணை வளப்படுத்தியும் மக்களை நலப்படுத்தியும் ஓட, குமரி மலையோ அந்நாளைய தமிழனின் பெருமையைப் போல வானுயர்ந்து நிமிர்ந்து நிற்க, குமரிக்கடலோ தமிழ் மக்களைச் சூழ்ந்திருக்க சோழ வளநாட்டின் வணிக நகரமாம் பூம்புகாரில் இருந்து என்னென்னெ பொருட்கள் கடல் வாணிகத்தின்வழி பரிவர்த்தனை செய்யப்பட்டனவோ அவை அனைத்தும் இன்று கெடா அழைக்கப்படும் கடார நிலத்தின் அன்றைய யான் மண்டலத்திலும் பரிவர்த்தனை செய்யப்பட்டன.
ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னம் இதே கெடா பெருமண்டலத்தை கட்டியாண்டவன் தமிழன். அதன் தாக்கமும் அந்நாளைய தமிழ்ப் பண்பாட்டின் நீட்சியும் இன்றளவும் கெடா அரண்மனையில் பிரதிபலிப்பதை நாம் காணலாம்.
தாம்பூலப் பரிமாற்றம், வெற்றிலை-பாக்கு, பள்ளாங்குழி ஆட்டம் யாவும் கெடா அரண்மனையில் எப்போதும் இடம்பெறும். இத்தகைய பண்பு நலன்களெல்லாம் பூம்புகார் நகரில் இருந்து குமரிக்கடல்வழியே அன்றைய கடாரத்திற்கு இறக்குமதியானவை.
கெடா மாநிலத்தின் 28-ஆவது சுல்தானாக விளங்கிய இவர், நாட்டின் மாமன்னராக 1970-யிலும் பின்னர் 2011-ஆம் ஆண்டிலும் என, இருமுறை அரியனை அமர்ந்து முழு தவணைக் காலத்தையும் நிறைவு செய்த பெருமைக்குரியவர்.
நாட்டின் நெற்களஞ்சியமாகத் திகழும் கெடா மாநிலத்தை தமிழ் மரபுவழி மன்னர்கள்தான் தொடக்கத்தில் ஆண்டனர் என்பதும் இடையில் இஸ்லாமிய மறுமலர்ச்சி ஏகமாக இந்த மலையக மண்ணில் நிகழ்ந்தபோது, அதன் தாக்கத்திற்கு ஏற்ப ஒன்பதாவது தமிழ் தர்பார் ராஜாவும் இஸ்லாத்தைத் தழுவி முதல் கெடா மாநிலத்தின் முதல் சுல்தானாக பரிமானம் பெறுகிறார்.
அந்த வரிசையில்தான் துங்கு அப்துல் ஹாலிம் முவாட்ஷாம் ஷா 28-ஆவது சுல்தானாக விளங்கினார். தொண்ணூறு வயதுவரை வாழ்ந்த அந்த மாமனிதருக்கு நவம்பர் 28 பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.