குணாளன் மணியம்
சென்னை, நவ.16- சென்னையில் நடைபெற்ற மூன்றாம் அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள் மாநாட்டில் மலேசியர்கள் ஐவருக்கு சாதனை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் ஒரு தனி மனிதனாக மருத்துவ கல்லூரியை நிறுவியதோடு உலக நாடுகளிலும் மருத்துவ கல்லூரியை விரிவுபடுத்தியுள்ள சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தின் தோற்றுநர் டான்ஸ்ரீ டத்தோ பாலன் அவர்களுக்கு தமிழ் உலக கல்வி தந்தை எனும் உயரிய தமிழர் சாதனை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் வழி தவறிச் செல்லும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்க்கைக்கு விடிவெள்ளியாக இருந்து மைஸ்கில்ஸ் கல்லூரியை நிறுவிய இயக்குநர் வழக்கறிஞர் பசுபதிக்கு நம்பிக்கை சுடர்ஒளி எனும் தமிழர் சாதனை விருது வழங்கப்பட்டது.

மலேசியாவில் ஏற்றுமதி, இறக்குமதி துறையில் முன்னோடி வர்த்தகராக இருந்து வரும் டத்தோஸ்ரீ ஆண்டி அவர்களுக்கு முன்னோடி வர்த்தகர் எனும் தமிழர் சாதனை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் மலேசியாவில் ஒரு முன்னோடி பெண் வர்த்தகராக நட்சத்திரம் போல் மின்னிக் கொண்டிருக்கும் பவானி விஸ்வநாதன் அவர்களுக்கு பெண் சுடரொளி எனும் தமிழர் சாதனை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு பெண்ணாக இருந்து கொண்டு துணிந்து வர்த்தகத் துறையில் ஈடுபாடு கொண்டு வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் பவானி, மலேசியப் பெண்களுக்கு வர்த்தத் துறை முன்னோடியாக இருக்கிறார் என்றால் அது மிகையில்லை.
மலேசியாவில் தமிழ்த் துறையில் மிகவும் பிரபலமான ஐயா பாண்டிதுரைக்கு தமிழ் உலக படைப்பாற்றல் மேதை எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
எழுமின் தி ரைஸ் என்றழைக்கப்படும் அமைப்பு நடத்திய இந்த மாநாடு நவம்பர் 14 தொடங்கி 16 வரை சென்னை, நுங்கம்பாக்கம் மகளிர் கிறித்துவக் கல்லூரி அரங்கில் 35 நாடுகளைச் சேர்ந்த 1500 பேராளர்கள் பங்கேற்றில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது என்பது குறிப்பிடத்தக்கது.