ஒரு தமிழ் நாளேட்டிற்கு பத்திரிகை தர்மமும் சமுதாய நோக்கமும் இல்லை பொன். வேதமூர்த்தி சாடல்

0
48

புத்ராஜெயா, நவ.29-
ஒரு தமிழ் நாளேட்டில் பத்திரிகை தருமமும் இல்லை; மக்களுக்கு நல்ல தகவலைச் சொல்ல வேண்டும் என்ற பொறுப்பும் இல்லை; அந்த நாளேட்டிற்கு தெரிந்ததெல்லாம் பத்திரிகை நடத்துவதாக சொல்லிக் கொண்டு தனிப்பட்ட பகையை வளர்ப்பதும் வெறுப்புணர்வைத் தூண்டுவதும்தான் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி சாடியுள்ளார்.

மித்ராவிற்கு மானியம் ஒதுக்கியது அரசு. அந்த நிதி குறித்து முழு விளக்கமும் கணக்கறிக்கையும் அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டியது கடமையும் பொறுப்பும் மித்ராவுக்கு உள்ளது. அதைவிட, முழு தார்மிகப் பொறுப்பு எனக்கும் இருக்கிறது. அத்துடன் சமுதாயத்திற்கும் தகவல் சாதனங்களுக்கும் அவ்வப்பொழுது விளக்கம் சொல்ல வேண்டிய கடப்பாடும் எங்களுக்கு இருக்கிறது.

அதனடிப்படையில், மித்ரா மானிய ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்றத்திலும் விளக்கம் அளித்து விட்டேன். ஊடகங்களுக்கும் ஒன்றல்ல; இரண்டல்ல பல தடவை விளக்கம் சொல்லி விட்டேன்.

இதை எல்லாத் தரப்பும் ஏற்றுக் கொண்டுவிட்ட நிலையில், அந்த தமிழ் நாளேடு மட்டும் திரும்பத் திரும்ப, அதே கணக்கைக் கேட்டு முதல் பக்கத்தில் அறிக்கை விடுவதும் தன் சொந்த நிருபர்களைவிட்டு அதே செய்தியை மீண்டும் மீண்டும் எழுத வைப்பதும் என்ன பத்திரிகை தருமம் என்று தெரியவில்லை. நானும் எத்தனை முறை அதேக் கணக்கைச் சொல்வது என்று புரியவில்லை.

தகவல் ஊடகத்திற்கு அறிக்கை விட்டால் அது, அனைத்து ஊடகத்துக்கும் சேர்த்துதான். அந்த தமிழ் நாளேட்டிற்கு மட்டும் தனியாக அறிக்கை விட வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய பதில் அறிக்கையையும் விளக்கத்தையும் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்யும் இந்த நாளேட்டிற்கு கீழறுப்பு வேலை செய்யமட்டும் நன்றாகத் தெரிகிறது.

எல்லாவற்றையும் நடுநிலை வாசகர்களும் பொதுமக்களும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here