செடிக் நிதியில் முறைகேடு! முன்னாள் அமைச்சர், துணை அமைச்சர்கள் இந்திய சமுதாய நிதியை நேரடியாக பெற்றனர் -அமைச்சர் பொன்.வேதமூர்த்தி குற்றச்சாட்டு

0
236

குணாளன் மணியம்

கோலாலம்பூர், நவ.4-
தேசிய முன்னனி ஆட்சியில் செடிக் நிதி ஒரு முன்னாள் அமைச்சருக்கும் இரண்டு துணையமைச்சர்களுக்கும் நேரடியாக வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த நிதிகளை வழங்குவதில் ஒரு தவறான அணுகுமுறை இருந்ததுள்ளது. இந்திய சமுதாய மக்கள் மேம்பாட்டிற்கு வழங்கப்பட்ட இந்நிதி ஒரு முன்னாள் அமைச்சர், இரண்டு முன்னாள் துணை அமைச்சர்களுக்கு நேரடியாக அனுப்பப்பட்டது என்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியான மஇகாவிற்கு செக்டிக்கில் இருந்து எந்த நிதியும் வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி சொன்னார்.

செடிக் எனப்படும் இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டு நிதி இந்திய சமுதாயத்திற்கு முறையாக சென்று சேரவில்ல என்றும் இதனால் பல புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அவ்வாறு தெரிவித்தார்.

செடிக் நிதி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் வேளையில் ஒரு முன்னாள் அமைச்சர், இரண்டு முன்னாள் துணையமைச்சர்கள் இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட நிதியை நேரடியாக பெற்றுள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் செயல்பட்ட இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டு நிதி இந்திய சமுதாயத்தை முறையாக சென்றடையவில்லை என்பதை தெரிவித்த அமைச்சர் வேதமூர்த்தி ம.இ.கா இந்த நிதியைப் பெறவில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார்.

தேசிய கணக்காய்வு அறிக்கையின் அடிப்படையில் இந்திய சமுதாயத்தின் நலனுக்காக செடிக்கிலிருந்து நூற்றுக்கணக்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. அவை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் தனி நபர்கள் பலன் அடைந்தார்கள் என வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தேசிய லஞ்ச தடுப்பு ஆணையத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றும் பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here