செடிக் வழியில் மித்ராவா? சிவகுமார் கருத்து தவறானது

0
95

  • எம்.ஏ.பி. சிலாங்கூர் ஒருங்கிணைப்பாளர் மணிமாறன்

காஜாங், நவ.9-
தேசிய முன்னனி ஆட்சியின் செடிக் போலவே இப்போது மித்ராவும் செயல்படுகிறது என்று பத்து காஜா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் குற்றம் சாட்டி இருப்பது அடிப்படையற்றக் குற்றச்சாட்டு என்று மலேசிய முன்னேற்றக் கட்சியின் (ஏம்.ஏ.பி.) சிலாங்கூர் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.மணிமாறன் கூறியுள்ளார்.

கடந்த ஆட்சியில் செடிக் தோற்றுவிக்கப்பட்டதற்கு காரணமே ஹிண்ட்ராஃப் இயக்கம்தான். ஆனாலும் செடிக் நிர்வாக நடைமுறையில், குறிப்பாக நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது தற்போது மலேசிய ஊழல் தடுப்ப ஆணையம் மேற்கொண்டு வரும் நடவடிக்கையே சாட்சி.

ஆனால், செடிக் தற்பொழுது புதிய ஆட்சியில் மித்ரா என்னும் பெயரில் புது வடிவம் கொண்டு புத்தாக்க முறையிலும் வெளிப்படைத் தன்மையிலும் செயல்பட்டு வருகிறது. மித்ரா நிதி ஒதுக்கீட்டில் எந்தத் தனி மனிதருக்கோ அல்லது அரசுசாரா அமைப்பிற்கோ எடுத்த எடுப்பில் நிதி ஒதுக்கப்படுவது இல்லை. பல்வேறு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு, முறையான பரிசீலனைக்குப் பிறகு, அதுவும் பிரதமர் துறை நிதிப் பிரிவின் ஒப்புதலுக்குப் பின்னர்தான் நிதி ஒதுக்கப்படுகிறது.

இந்த நடைமுறை யாவும் உடனுக்குடன் மித்ராவின் இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இது குறித்தெல்லாம் பிரதமர் துறை அமைச்சர் மாண்புமிகு பொன்.வேதமூர்த்தி சார்பிலும் மித்ரா சார்பிலும் பல முறை அறிக்கையும் விளக்கமும் அளித்த பின்னரும் மித்ராவைத் தாக்கி அறிக்கை விடும் சிவகுமாரின் போக்கு கண்டிக்கத்தக்கது.

ஒரு மாநில சட்டமன்றத்திற்கு நாயகராக இருந்தவர், தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உறுப்பியம் பெற்றிருப்பவர் அதுவும் ஆளும் நம்பிக்கைக் கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினரான சிவக்குமார் இப்படி செயல்படலாமா?

இவருக்கு பொது நோக்கமும் சமூகத்தின்மீது அக்கறையும் இருந்தால், இவரே நேரடியாக மித்ரா அலுவலகத்திற்குச் சென்று நல்லெண்ணத்தின் அடிப்படையில் எல்லா விவரத்தையும் நேரில் கேட்டறியலாம். அப்படி சிவகுமார் செய்வாரானால், நான்காவது தொழில் புரட்சிக்கு ஏற்ப இந்திய இளைஞர்களை, குறிப்பாக ‘பி-40’ பிரிவைச் சேர்ந்த மாணவர்களை எதிர்காலச் சவாலுக்கு ஏற்ப மித்ரா தயார்ப்படுத்துவதை நேரில் கண்டறிந்து பாராட்டுவார்.

அதை யெல்லாம் விடுத்து, முழு விவரத்தையும் அறியாமல் பத்திரிகையில் தவாறான முறையில் அறிக்கை விடுவதால் யாருக்கு என்ன பயன் என்பதை இவரே சிந்தித்துப் பார்க்கட்டும் என்று மணிமாறன் தன்னுடைய ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here