குணாளன் மணியம்
கோலாலம்பூர், நவ.29-மலேசிய இந்தியர்கள் ம.இ.காவை ஒதுக்கித் தள்ளியதற்கு சாதி அரசியலும் ஒரு காரணம் என்பதால் அதனை இனியும் அனுமதிக்க முடியாது என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.
ம.இ.காவில் கடந்த காலங்களில் சாதி அரசியல் பரவலாக இருந்ததால் இந்தியர்கள் ம.இ.கா மீது அதிருப்தி கொண்டிருந்தனர். இன்றைய காலகட்டத்தில் சாதி அரசியல் பொருந்ததாத ஒன்று என்பதால் அதனை இனியும் ம.இ.காவில் அனுமதிக்க முடியாது என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
ம.இ.காவில் இனி யாரும் சாதி அரசியல் நடத்தக்கூடாது. அப்படி நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக ம.இ.காவில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் அதிரடியான அறிவிப்பை அண்மையில் செய்திருந்தார்.
ம.இ.கா அனைவருக்கும் சொந்தமான கட்சி. இதில் சாதி அரசியல் கூடவே கூடாது. அதுவும் தேர்தல் காலங்களில் சாதிப் பெயரைச் சொல்லி ஆதரவு தேடுவது தெரியவந்தால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றார் மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஷ்வரன்.
மலேசிய இந்தியர்கள் அனைவரின் ஒற்றுமைக்கு சாதி ஒரு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது. ம.இ.காவும் இந்திய சமுதாயத்திற்கும் சாதி ஒரு தடைக்கல்லாக இருக்கக் கூடாது என்பதற்காகவே ம.இ.கா சாதி அரசியலுக்கு முற்றாக தடை விதித்துள்ளதாக டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் மேலும் சொன்னார்.