ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஷ்வரனை குறை சொல்ல சிவநேசன் அருகதையற்றவர் ம.இ.கா சிவசுப்பிரமணியம் சாட்டை

0
341

கோலாலம்பூர், நவ.5-
சோஸ்மாவில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் ஜசெக கட்சியை சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 12 பேரை காப்பாற்றிட நடவடிக்கையில் இறங்காத பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் வாய்ச்சொல்லில் வீரர் என்று ம.இ.காவைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் சாடியுள்ளார்.

அறைத்த மாவையே எத்தனை முறை அனைத்துக் கொண்டிருப்பீர்கள்? உங்கள் பொய் மூட்டைகளின் சாயம் வெளுத்து விட்டது. டான்ஸ்ரீ விக்னேஷ்வரனை குறை சொல்ல சிவநேசன் தகுதியற்றவர் என்று சிவசுப்பிரமணியம் சூளுரைத்துள்ளார்.

ஒட்டு மொத்த இந்திய சமுதாயம் உட்பட நாடே சோஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் நிலை கண்டு கொதித்துள்ளது. ஜசெக கட்சியை சேர்ந்த மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.சாமிநாதன் மற்றும் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணா இருவரின் குடும்பத்தினர் நடுத்தெருவில் கண்ணீர் விட்டும் வாய்திறக்காத சிவநேசன் சாமியாராக உலா வருவது ஏன் என்று சிவசுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற தேசிய ம.இ.கா தீபாவளி பொது உபசரிப்பில் 10 ஆயிரம் இந்தியர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து வயிற்று எரிச்சலினால் ம.இ.காவையும் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஷ்வரனையும் சாடுவதை சிவநேசன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சிவசுப்பிரமணியம் எச்சரித்தார்.

மலேசிய இந்தியர்கள் அனாதைகள் அல்ல. ம.இ.கா இந்தியர்களுக்கு எப்போதும் அரணாக இருந்து குரல் கொடுக்கும். தீபாவளி போன்ற திறந்த இல்ல உபசரிப்பினை ம.இ.கா தொடர்ந்து நடத்தும். இந்தியர்கள் இனி மக்கள் கூட்டணியை நம்பி மோசம் போக மாட்டார்கள் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தீபாவளி உபசரிப்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.இதுகுறித்து சிவநேசன் வயிற்றெரிச்சலி கருத்து கூறியிருந்தார்.

குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் சிவநேசன் போன்ற சிறுபிள்ளை அரசியல் நடத்துபவர்கள் கஞ்சிக் கதைகளை அவிழ்த்து விட்டு அரசியல் லாபம் தேடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மலேசிய இந்தியர்கள் இனியும் உங்கள் பொய் மூட்டைகளை நம்பி ஏமாறத் தயாராக இல்லை. ம.இ.காவை குறை சொல்வதை நிறுத்துங்கள். மக்கள் உங்களுக்கு பல வழிகளில் இதனை உணர்த்தி விட்டனர்.

வெற்று வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறந்து விட்டன. பொது மக்களுக்கு வழங்க வேண்டிய வாய்ப்பு, அங்கீகாரம், அதிகாரம் எல்லாவற்றையும் உங்கள் மக்கள் கூட்டணி ஆட்சியில் கோட்டை விட்டு விட்டு அரசியல் நாடகத்தை அரங்கேற்ற வேண்டாம் என்று சிவசுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்தார்.

பேரா மாநிலத்தில் இந்தியர்களுக்கு இதுவரை எதையும் செய்ய முடியாத சிவநேசன், ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற போர்வையில் மக்களை குழப்ப வேண்டாம் என்று ம.இ.கா சிவசுப்பிரமணியம் சூளுரைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here