தமிழை உயிர் மூச்சாக கருதி தமிழர் வாழும் இடங்களில் ‘தமிழாற்றுப்படை’ யை கொண்டு சேர்க்க வேண்டும்! -கவிப்பேரரசு வைரமுத்து

0
14

குணாளன் மணியம்

கோலாலம்பூர் டிச.4-
தமிழை உயிர் மூச்சாக கருதி தமிழர் வாழும் இடங்களில் ‘தமிழாற்றுப்படை’ யை கொண்டு சேர்க்க வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.

தமிழாற்றுப்படை 24 ஆளுமைகளை உள்ளடக்கிய இந்த நூற்றாண்டின் ஒரு வரலாற்று நூல். இதனை படைக்க பல போராட்டங்களை சந்தித்திருக்கிறேன். என் உயிர் மூச்சாக நினைத்து நான்கு ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு நூல் வடிவம் கண்ட தமிழாற்றுப்படை நூலை ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டும் என்று வைரமுத்து தெரிவித்தார்.

தமிழர்கள் வீடுகளில் தமிழாற்றுப்படை இருக்க வேண்டும். உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தமிழாற்றுப்படை நூல் இருக்க வேண்டும் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தலைமையில் ம.இ.கா தலைமையகம் நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றுகையில் கவிப்பேரரசு வைரமுத்து அவ்வாறு கேட்டுக் கொண்டார்.

ம.இ.கா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வரலாற்றுப் படைப்பை டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் பனிக்கட்டியை உடைத்து வெளியே எடுத்து வைரமுத்துவிடம் வழங்க, அதனை அவர் மீண்டு டான்ஸ்ரீ விக்னேஷ்வரனிடம் வழங்கினார்.

இந்த தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவை ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மிகவும் சிரமப்பட்டு ஏற்பாடு செய்திருந்தார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.ராஜேந்திரன் ஒத்துழைப்பில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.

இந்த தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் ஆர்வலர்கள் அலையென திரண்டிருந்தனர். கவிஞர் வைரமுத்து ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் உரையாற்றி மக்களை கட்டிப் போட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here