அமைச்சர் பொன். வேதமூர்த்தியின் பொன்னான சேவைக்கு பாராட்டு

0
10

கோலாலம்பூர், ஜன.7- இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ராவுக்கு பொறுப்பு வகிக்கும் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி, மலேசிய இந்திய சமுதாயத்தில் நலிந்த பிரிவினரின் மேம்பாட்டிற்காக பல நல்லத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். இதில் குறிப்பாக, இந்திய இளைஞர்கள் நான்காவது தொழில்புரட்சியை எதிர்கொள்வதற்கு ஏற்ப அவர்களை மித்ரா மூலம் தயார்படுத்தி வருகிறார் என்று
சபா லகாட் டத்தோ இந்தியர் இயக்கத் தலைவர் டத்தோ நாகா புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த ஆண்டில் மித்ரா மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 10 கோடி வெள்ளி மூலம் இந்திய சமுதாயத்தில் நலிந்த பி-40 தரப்பினர், இளைஞர்கள், மாணவர்கள் என ஏறக்குறைய ஒரு இலட்சம் பேர் பயனடைந்துள்ளதாக டத்தோ நாகா தெரிவித்துள்ளார்.

‘வளமான மலேசியா – நலமான இந்திய சமுதாயம்’ என்பதையே இலக்காகக் கொண்டுள்ள பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அவர்களின் எண்ணற்ற சேவைத் தொடர்ந்திட, அவரின் புதுமை எண்ணங்கள் பூத்திட மலேசிய இந்திய சமுதாயம் தொடர்ந்து அமைச்சர் வேதமூர்த்தி ஆதரவு அளிக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் பொன்.வேதமூர்த்தி அவர்களின் கடமையும் சேவையும் பரந்து விரிந்தது, விசாலமானது; பொன்னான பணியாற்றும் பொன்.வேதமூர்த்தி அவர்களுக்கு சபா வர்த்தக அமைப்புகளின் சார்பாகவும் சபா இந்தியர்களின் சார்பாகவும் 2020-ஆம் ஆண்டு தொடங்கியுள்ள இந்த வேளையில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் ஒன்றிணைந்து தற்காக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு அனைத்துத் தரப்பினருக்கும் உள்ளது. ஆனாலும் கல்வி, சமயம் தொடர்பாக பெரும்பாலானவர்கள் ஒருசார்பான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையைத் தவிர்க்கவும் நாட்டு மக்களிடம் தேசிய பார்வை மேலோங்கவும் மலேசிய முன்னேற்றக் கட்சியின்(ஏம்.ஏ.பி.) தலைவருமான பொன்.வேதமூர்த்தி கடமை ஆற்றி வருகிறார். இதை பிரதமர் துன் மகாதீரும் நன்கு அறிவார்.

இதில் குறிப்பாக, தேசிய நல்லிணக்க ஆலோசனை மன்றத்தை ஏற்படுத்துவதற்-கான சட்ட முன்வரைவை தாக்கல் செய்ததில் இவரின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதில் நியமனம் செய்யப்பட விருக்கும் உறுப்பினர்களுக்கும் பிரதமர் துன் மகாதீர் ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய கூட்டு சமுதாயத்தில் நிலவி வரும் இணக்கப் போக்கு, புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்த அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அவர்கள் ஆக்கரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். அத்துடன், பூர்வகுடி நல ஆணையத்துக்கும் பொறுப்பு வகிக்கும் இவர், அந்த மக்களின் நலனுக்காக பல புதிய நடவடிக்கைகளை மேற்கோண்டுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 21-ஆம் நாள் பூர்வகுடி மக்களுக்காக தேசிய மாநாட்டை புத்ராஜெயாவில், அதுவும் நாட்டில் முதல் தடவையாக நடத்தினார். அந்த மக்களின் பாரம்பரிய நில உரிமையை நிலைநாட்ட சட்ட நடவடிக்கை, அவர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதி, கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டிற்காகவும் அமைச்சர் இடைவிடாமல் செயல்பட்டு வருகிறார். பூர்வகுடி கிராமங்களுக்கு அடிக்கடி பயணமும் மேற்கொள்கிறார்.

இவ்வாறு பலவகையாலும் சிறப்பாக பணியாற்றும் அமைச்சரும் எம்.ஏ.பி. கட்சியின் தலைவருமான பொன்.வேதமூர்த்தி அவர்களுக்கு சபா இந்திய மக்களின் சார்பில் மீண்டும் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று
சபா லகாட் டத்தோ இந்தியர் இயக்கத் தலைவர் டத்தோ நாகா குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here