ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாதீர் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வலியுறுத்து

0
63

கோலாலம்பூர், ஜன.9- ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இறங்க

பூசாட் பண்டார் பூச்சோங் இடைநிலைப் பள்ளியில் இடம்பெற்றுள்ள சீனப்புத்தாண்டு விழாக்கால அலங்காரத்தை அகற்றும்படி வழக்கறிஞர் முகமட் கைருள் அஸாம் கோருவது ஒரு மலேசியர் என்ற அடிப்படையில் பொருத்தமில்லாத நடவடிக்கையாகும் என்று ஒற்றுமை துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

புத்ரா பார்ட்டி பிரிபூமி பெர்க்காசா மலேசியா கட்சியின் உதவித் தலைவருமான இவர் இனம் மற்றும் சமயத்தைப் பயன்படுத்தி பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்வதாகத் தெரிகிறது.

மலேசிய மக்களிடையே இனம், சமயம் குறித்து தெளிவான புரிந்துணர்வை ஏற்படுத்த அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கு முகமட் கைருளைப் போன்றவர்கள் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்துவதை அறிந்து உண்மையிலேயே ஏமாற்றம் அடைவதாக இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் பொன்.வேத மூர்த்தி கூறியுள்ளார்.

சீனப்புத்தாண்டு விழா அலங்காரம் தொடர்பில் இப்படி வேண்டுமென்றே எதிர்மறையான கருத்துகளைப் பரப்புவதை எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மலேசியாவைப் போன்ற பல இன, சமய நாட்டில், மக்களின் ஆன்ம வலிமையை சிதைக்கவும் ஒற்றுமையின்மை ஊக்குவிக்கவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு எதிராக மலேசியர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

அறியாமையையும் தவறான புரிதலையும் விதைத்து மலேசிய மக்கள் போற்றும் சகிப்புத்தன்மைக்கு பங்கம் ஏற்படுத்துவோரை மக்கள் அடையாளம் காண வேண்டும்.

2020 கூட்டு வளப்பத் திட்டத்தின் மூலம் முழு உள்ளடக்க சமுதாயத்தைக் கட்டமைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கும் கருத்து சுதந்திரத்திற்கும் தடை ஏற்படுத்தவும் சுயவிளம்பரத்திற்கும் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எது எவ்வாறயினும் வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்டும் உயர் பண்புநெறியை மலேசியர்கள் தொடர்ந்து நிலைநாட்டுவார்கள் என்பதிலும் குறிப்பாக விழாக் காலங்களில் ஒன்றுபட்டும் உள்ளடக்க சமுதாயமாக மக்கள் விளங்குவார்கள் என்பதிலும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளதென்று அமைச்சர் பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here