தேசிய பொங்கல் விழா 2020 அமைச்சர் பொன். வேதமூர்த்தி தொடக்கி வைப்பார்

0
20

புத்ராஜெயா, ஜன.30-
தேசிய பண்பாட்டு பொங்கல் விழாவை பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி பத்துமலை வட்டாரத்தில் தொடக்கி வைக்கவுள்ளார்.

பிரதமர் துறை அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை, சுற்றுலாத் துறை ஆகிய அமைச்சுகளின் இணை ஏற்பாட்டிலும் தேசிய இளைஞர் மன்ற ஒருங்கிணைப்பிலும் நடைபெற உள்ள இந்தத் தேசியப் பொங்கல் விழா வரும் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 2-ஆம் நாள் பத்துமலை, கியோ பின் தேசிய சீன ஆரம்பப்பள்ளியில் காலை 8.00 மணி தொடங்கி நண்பகல் வரை நடைபெற உள்ளது.

பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தொடக்கி வைக்கவுள்ள இந்நிகழ்வில் சுற்றுலா மற்றும் கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ முகமட் கெத்தாப்பியும் கலந்து கொள்ளவிருக்கிறார்.

தமிழ் நாட்காட்டியின்படி அறுவடைக்கு நன்றி தெரிவிக்கும் விழா, இந்தப் பொங்கல் திருநாளாகும். மலேசிய மக்கள் காலமெல்லாம் போற்றிவரும் சமய நல்லிணக்கம், சமூக ஒருங்கிணைப்பு, மலேசியர்களின் சகிப்புத்தன்மை ஆகிய கூறுகளுக்கு கட்டியம் கூறும் இந்தப் பொங்கல் திருநாள் விழாவில் இடம்பெறவுள்ள அனைத்து இனப் பெண்களுக்கான பொங்கல் சமைக்கும் போட்டி, கோலப் போட்டி, பல்லின இளைஞர்களுக்கான மாலை கட்டும் போட்டி, தோரணம் தொடுக்கும் போட்டி, தங் லோங் விளக்கு தயாரிக்கும் போட்டி, பட்டம் தயாரிக்கும் போட்டி, உரியடிக்கும் போட்டி, 12 வயதுக்குக் கிழ்ப்பட்டவர்கள் மேற்பட்டவர்கள் என இரு பிரிவாக வண்ணம் தீட்டும் போட்டிகள் ஆகியன விறுவிறுப்பையும் ஆர்வத்தையும் கூட்டவுள்ளன.

மலேசிய இளைஞர் மன்றத்தில் உறுப்பியம் பெற்றுள்ள இந்திய இளைஞர் அமைப்பில் இடம்பெற்றுள்ள இந்து இளைஞர் இயக்கம், தமிழ் இளைஞர் மணிமன்றம், இந்திய இளைஞர் மன்றம், சீக்கிய இளைஞர் இயக்கம், கெப்பிமா என்னும் இந்திய முஸ்லிம் இளைஞர் இயக்கம் உட்பட ஏராளமான அரசுசாரா அமைப்பினரும் பங்குபெற இருக்கும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்க பொதுமக்களும் அழைக்கப்-படுகின்றனர்.

இந்த ‘2020-தேசிய பண்பாட்டு பொங்கல் கொண்டாட்டம்’ தொடர்பில் மேல் விவரத்திற்கு கீழ்க்காணும் எண்களுடன் தொடர்பு கொள்ளலாம். அருண்-012-650 4254 அல்லது 013-6770 529

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here