தைப்பொங்கல் அனைவர் வாழ்விலும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தட்டும் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் பொங்கல் வாழ்த்து

0
6

புத்ராஜெயா, ஜன.14-
புத்தாண்டில் பிறந்திருக்கும் தைத்திருநாளானது அனைவரின் வாழ்விலும் புதிய மாற்றத்தையும் ஏற்றத்தையும் கொண்டு வந்து மகிழ்ச்சியை நிலைக்கச் செய்ய வேண்டும் என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

உலகெங்கும் வாழும் பெருமக்கள் அனைவரும் உவகையுடன் கொண்டாடும் இந்த பொங்கல் திருநாளில் யாவரும் வேறுபாடுகள் மறந்து சகோதரத்துவம் நிறைந்து ஒற்றுமைத் திருநாளாக இந்நாளைக் கொண்டாடி மகிழ வேண்டும்.

உழவுத் தொழிலுக்கு வந்தனம் செய்வோம் என்று உழைப்பிற்கு உயர்வைத் தேடித் தரும் உழவுத் தொழிலைப் போற்றும் விதமாகவும், அதற்கு வழி கொடுக்கும் சூரிய பகவானுக்கு நன்றி கூறும் தினமாகவும் இந்த பொங்கல் தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

போகியின் போது வெறும் பொருட்களை மட்டும் எரிப்பதோடு நின்று விடாது, காலத்திற்கு உதவாத, பயன்படாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத அனைத்து எண்ணங்களையும் செயல்களையும் இந்நாளில் விட்டொழிக்க வேண்டும் என்ற மகத்துவத்தை போகி எடுத்துணர்த்துகிறது.

காலத்திற்கேற்ப எண்ணங்களை மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் வகையில், பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொண்டு சிந்தனை மாற்றத்தையும் இந்த நாளில் நம் உள்ளத்தில் கொண்டு வரவேண்டும்.

தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். செழிப்பான தை மாதம் அனைவரது வாழ்விலும் செழிப்பான காலத்தைக் கொண்டு வரும் என்பதும் நம்பிக்கை. எனவே நாட்டு மக்கள் அனைவரது இடர்களும் நீங்கி நல்வழி பிறக்கும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்.

மொழியால் வேறுபட்டிருந்தாலும் மதத்தால் நாம் அனைவரும் ஒன்றே என்பதை மனதில் கொண்டு இப்பொங்கல் திருநாளை அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாடுவோம் என்று கேட்டுக் கொண்டுள்ள அமைச்சர் எம்.குலசேகரன் மலேசியாவாழ் இந்தியர்கள் அனைவருக்கும் தமது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here