பொருள் பொதிந்த பொங்கல் திருநாளை பொருள்பட கொண்டாடுவோம்! டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பொங்கல் வாழ்த்து

0
39

கோலாலம்பூர், ஜன.14-
பொங்கல் திருநாள் பொருள் பொதிந்த நன்னாள் என்பதால் இத்திருநாளை அனைவரும் பொருள்பட கொண்டாட வேண்டும் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாம் எத்தனையோ விழாக்களை கொண்டாடி வருகிறோம். அனைத்து விழாக்களிலும் மகிழ்ச்சி ஒன்றே கொண்டாட்டமாக இருக்கும். ஆனால் பொங்கல் திருநாள் என்பது பொருள் பொதிந்த – உழவர்களின் திருநாளாகவும் – தமிழர்களின் புத்தாண்டாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது என்று மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

பொங்கல் திருநாளில் நல்லது நடந்தேறட்டும்!
சூரிய ஒளிக் கற்றை நம் அனைவரின் வாழ்விலும் வீசட்டும்!
உழைப்பின் உயர்வினை உலகுக்கு உரைத்திடும் அறுவடைத் திருநாளாகவும், அந்த உயர்வுக்கு உற்ற துணையாக நிற்கும் இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் உழவர் திருவிழாவாகவும் பொங்கல் திருநாள் திகழ்கிறது.

தமிழினத்தில் ஆதியில் உருவாக்கப்பட்ட பழம் பெருமைகளை பேணிக் காப்பாவர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதுடன், அவற்றையெல்லாம் நாம் தொடர்ந்து மீட்டெடுகும் விழாவாகவும் இவ்விழாவினை நாம் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டும்.

இன்றையச் சூழ்நிலையில் இந்தியர்களாகிய நாம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். இது மறுக்க முடியாத உண்மையாகும். அவற்றையெல்லாம் முறியடிக்க வேண்டுமென்றால் நம்மிடையே ஒற்றுமை மிகவும் அவசியமாகும்.

நம்மிடையே கருத்துகள் வெவ்வேறாக இருக்கலாம்; கொள்கைகளும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் நாமனைவரும் இந்தியர்கள் என்று ஒரே சிந்னைதான் நமது இதயங்களில் விதைக்கப்பட வேண்டும். ஒன்றுபட்டு பாடுபடும் பொழுதுதான் இந்திய சமுதாயம் வளர்ச்சிப் பெறும் – மேம்பாடு காணும். இந்தியர்கள் இன்று பிரிந்திருக்கலாம். ஆனால், என்றாவது ஒருநாள் அனைவரும் ஒன்றிணைந்து இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் உழைத்திடுவதற்குரிய ஒரு காலக்கட்டம் வரும் என்பது உறுதி.

அந்த உறுதியை மனத்தில் ஏற்றுக் கொண்டு, பழையன கழிதலும் – புதியன புகுத்தலும் என்ற அறிவுப்பூர்வமான சிந்தனையை மனத்தில் ஏந்தி, நமது இல்லங்கள் தோறும் இன்ப பொங்கல் பொங்கட்டும் – நமது மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பரவட்டும் என்று மாண்புமிகு செனட்டர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தமது பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

இப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைத்துத் தமிழ் பெருங்குடி மக்களுக்கும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here