இந்தியர்களின் இறுதிச் சடங்குச் சேவைகளை ஒழுங்குபடுத்தவும் நெறிப்படுத்தவும் புதிய இயக்கம் உதயம்

0
534

கோலாலம்பூர், பிப்.16-
இந்நாட்டில் இந்துக்களின் இல்லங்களில் இறப்புச் சம்பவங்களில் நடத்தப்படும் இறுதிச் சடங்குகளில் பல முறையற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதால் இதற்கு தீர்வு காணும் நோக்கத்தில் சங்கம் ஒன்று உதயமாகியுள்ளது.

இதற்கு ஒரு முற்றுப்புள்ளை வைக்க வேண்டும் என்ற முயற்சியில் ‘மலேசிய இந்திய இறுதிச் சடங்கு சேவை இயக்கம்’ அதிகாரப்பூர்வமாக பதிவு பெற்றுள்ளது என்று அதன் தலைவர் டத்தோ டாக்டர் டேவ்மன் சேகர் தெரிவித்தார்.

மலேசியா பல இன மக்கள் வாழும் நாடாகும். ஆனால் பிற இனத்தவர்களிடமும் மதத்தினர்களிடமும் இது போன்ற பிரச்சினை இல்லை.
குறிப்பாக இந்தியர்களின் இல்லத்தில் நிகழும் மரணச் சம்பவங்களில் பல படுமோசமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இறுதிச் சடங்கு என்பது உடலில் இருந்து ஆத்மா பிரிந்து விட்ட நிலையில் அந்த உடலை மிகச் சரியாக தகனம் அல்லது அடக்கம் செய்வதற்கு முன் மேற்கொள்ளப்படும் சடங்குகளே ஆகும்.
நம்முடைய ஆகம முறைப்படி இப்படிதான் இந்தச் சடங்குகளைச் செய்ய வேண்டும் என்று சில வரைமுறைகள் இருக்கின்றன. இதையெல்லாம் கடந்து சில பொறுப்பற்ற நபர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையானது நம்முடைய சமூகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது.

எனவே இதனை முறைப் படுத்த வேண்டும். இது குறித்து மக்களுக்கு முறையான போதனையோ அல்லது விழிப்புணர்வோ இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு அதனைச் சரியான முறையில் போதிக்க வேண்டும்.

அதையும் தாண்டி வேண்டும் என்று இறுதிச் சடங்கு நடவடிக்கையின் போது தேவையில்லாத வேலைகளைச் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்காகத்தான் ‘மீஃபா’ எனப்படும் மலேசிய இந்திய இறுதிச் சடங்கு சேவை இயக்கம் அதிகாரப்பூர்வமாக உதயமாகி இருக்கிறது. இந்த இயக்கம் நாடு முழுவதும் தன்னுடைய கிளைகளை அமைத்து உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறது.

பொதுமக்கள் மட்டுமின்றி இறுதிச் சடங்கு சேவையை செய்து வரும் நிறுவனங்களும் தங்களிடம் உறுப்பினராகப் பதிந்து கொள்ள வேண்டும். இதன் வாயிலாக தங்களிடம் உறுப்பினராகப் பதிந்து கொண்டிருப்பவர்களின் குடும்பத்தில் ஏதேனும் மரணச் சம்பவங்கள் நிகழ்ந்தால் உடனே அவர்களின் இறுதிச் சடங்கு சேவைக்கு தேவைப்படும் நிதியில் 50 விழுக்காடு தொகையை இந்த இயக்கம் உடனடியாக வழங்கும்.

அதேபோல் இந்த இயக்கத்திடம் உறுப்பினராக இணைந்து கொண்டிருக்கும் இறுதிச் சடங்கு சேவை நிறுவனங்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கும் என்றும் அவர் சொன்னார்.

இந்நாட்டில் இருக்கின்ற இந்திய இறுதிச் சடங்கு சேவை வழங்கும் நிறுவனங்கள், இந்த இயக்கத்தில் உறுப்பினராவதன் மூலமாக ஆகம முறைப்படி முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இறுதிச் சடங்கு சேவை நடத்துனர்களை உருவாக்க முடியும்.
அப்படிச் செய்தால் நாடு முழுவதும் எல்லா இடங்களிலும் நடைபெறும் இறுதிச் சடங்குகளும் ஒரேமாதிரி நடத்தப்படும்.

அதற்குத்தான் இந்த சங்கம் மிகத் தீவிரமாகப் பல திட்டங்களை வகுத்து வருகிறது.
மலேசிய இந்திய இறுதிச் சடங்கு சேவை இயக்கத்தின் தொடக்கம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் பிப்ரவரி 24ஆம் தேதி மகா சிவராத்திரி தினத்தன்று வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நம்முடைய கலாசாரத்தை பாரம்பரியத்தை ஆகம முறைப்படி நடத்தப்படும் சடங்குகளை சிலர் கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருக் கிறார்கள். இந்த இயக்கம் அவர்களுக்கு எதிராக நடவடிக் கைகளை எடுக்கும் இயக்கமாகச் செயல்படும். அதைத் தவிர்த்து முறையாக அனைத்தையும் செய்பவர்களுக்கு இது ஆதரவான இயக்கமாகவே விளங்கும் என்றார் அவர்.

இந்த இயக்கம் குறித்தும் அதன் நடவடிக்கை குறித்தும் விளக்கம் பெற விரும்புவோரும் இதில் உறுப்பினர்களாக இணைய விரும்புவோரும் 03-71790481 என்ற எண்ணில் மீஃபாவின் தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here