ஒரு நாளைக்கு ஒரு மாணவருக்கு 2 வெள்ளி தமிழ்ப்பள்ளியில் தொடங்கியது ‘அன்னம் பகிர்ந்திடுவோம் திட்டம்’

0
29

உலுசிலாங்கூர், பிப்.11-
பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அரை வயிறு, கால் வயிறு உணவு கூட அருந்தாமல் செல்லும் நிலை இந்த நவீன காலத்திலும் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், இதுதான் நிதர்சனமான உண்மை.

மாணவர்கள் காலை 7.30 மணிக்கு பள்ளியில் நடைபெறும் சபைக் கூடல் அங்கம் நிறைவு பெறுவதற்கு சற்றுத் தாமதம் ஆனால் தொடர்ந்து நிற்பதற்குக் கூட சக்தி இல்லாமல் மயங்கி விழுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது என்று உலு சிலாங்கூர் புக்கிட் பெருந்தோங் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அண்மையில் அப்பள்ளியில் நடைபெற்ற மாணவர்கள் சத்து உணவு திட்டமான ‘அன்னம் பகிர்ந்திடுவோம் திட்டத்தின்’ போது அவ்வாறு கூறினார்.

இன்று நாம் தொழில் நுட்பத்தைப் பற்றி பேசுகிறோம், உயர் கல்வி பற்றி பேசுகிறோம், பொருளாதார உருமாற்றத்தைப் பற்றி பேசுகிறோம்.
ஆனால், இன்னும் நம்முடைய தமிழ்ப் பள்ளியில் காலை சிற்றுண்டி உண்ணாமல் புத்தகப் பையை மாட்டிக் கொண்டு கல்வி கற்க மாணவர்கள் வருகிறார்கள்.

வயிறு நிறைந்திருந்தால்தான் வகுப்பில் ஆசிரியர் கற்றுக் கொடுக்கும் பாடம் மாணவர்கள் மனதில் பதியும். எனவே தொடக்கத்திலேயே நாம் சரி செய்ய வேண்டிய சூழல்கள் நிறையவே இருக்கிறது. இப்போது குழந்தைகளின் பசியை போக்குவதற்கு ஏதாவது செய்ய வேண்டிய முயற்சியில் ஆசிரியர் மணிமாறன் உணவுத் திட்டம் என்ற தலைப்பில் ‘அன்னம் பகிர்ந்திடுவோம் எனும் திட்டத்தை’ புக்கிட் பெருந்தோங் தமிழ்ப் பள்ளியில் தொடங்கியிருக்கிறது என்று மலேசிய கல்வி மேம்பாட்டு , சமூக நல இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி தெரிவித்தார்.

ஒவ்வொரு பள்ளிக்கும் அரசாங்கத்தின் இலவச உணவுத் திட்டம் வழங்கப்படுகிறது. பள்ளியின் மொத்த மாணவர் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கிறது.
உலு சிலாங்கூர் போன்ற உட்புறப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளில் வறுமையில் வாழும் குடும்பத்தினர் அதிகமான பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளுக்கு படிக்க அனுப்பி வைக்கிறார்கள்.

இந்த பிள்ளைகளின் பசியை போக்குவதும் திறம்பட படிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது இந்த சமுதாயத்தின் கையில் இருக்கிறது.
எனவே சமுதாயத்தின் பிரதிநிதிகளாக இருக்கும் சமூக அமைப்புகள் இந்த நடவடிக்கையை கருத்தில் கொண்டு அதற்கு உறு துணையாக செயல்பட வேண்டும் என்றும் ரவி கேட்டுக் கொண்டார்.

இப்போதைக்கு புக்கிட் பெருந்தோங் தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 35 மாணவர்களுக்கு தினசரி தலா 2 ரிங்கிட் வழங்கும் முயற்சியை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது மலேசிய கல்வி மேம்பாட்டு, சமூக நல இயக்கம்.
இந்த 35 மாணவர்களுக்கும் ஒரு நாளைக்கு 2 ரிங்கிட் வீதம், ஒரு வாரத்தில் 5 நாட்களுக்கு தேவையான மொத்த தொகையான 350 ரிங்கிட்டை ரொக்கமாகவே பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்து விடுவதாக ரவி சொன்னார்.

காலை சபைக் கூடலின் போது பள்ளி ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அந்த ரொக்கத்தை பகிர்ந்தளிப்பர்.
அந்த 2 ரிங்கிட்டை கொண்டு பள்ளி சிற்றுண்டி சாலையில் இந்த மாணவர்கள் தங்களுக்குத் தேவையான உணவை வாங்கி உண்ணலாம் என ரவி தெரிவித்தார்.

இந்த முயற்சிக்கு முழு ஆதரவு வழங்கிய பள்ளி நிர்வாகத்திற்கும், தலைமை ஆசிரியர் கலாவதிக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கும் ரவி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ஒரு மாணவருக்கு கிட்டதட்ட 40 ரிங்கிட்டை செலவிடுகிறோம். ஓர் ஆண்டிற்கு அது 400 ரிங்கிட்டாக கணக்கிடப்படுகிறது.
இந்த திட்டத்தில் பங்கெடுக்க விரும்புவர்கள் ஒரு மாணவருக்கு உண்டான சிற்றுண்டி செலவிற்கான தொகையை வழங்கி அன்னம் பகிர்ந்திடுவோம் திட்டத்தில் பங்கெடுக்கலாம் என்று ரவி அழைப்பு விடுத்தார்.

இந்த அன்னம் பகிர்ந்திடுவோம் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சிக்கு பத்தாங் காலி சட்டமன்ற உறுப்பினர் ஹருமைனியின் இந்திய பிரிவு அதிகாரி சின்னையா உட்பட இந்த இயக்கத்தின் பிரதிநிதிகளான மணிவண்ணன் கந்தசாமி, விக்கி, முத்துக்குமார் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here