கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலய மண்டப வளர்ச்சிப் பணிக்காக மானியம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் -அமைச்சர் பொன்.வேதமூர்த்தி

0
14

கோலசிலாங்கூர்,பிப்.10-
கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலய மண்டப வளர்ச்சிப் பணிக்கு மானியம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

இந்த செந்தமிழ் அரங்கம் என்று பெயரிடப்பட்டுள்ள மண்டபத்தில் பல்வேறு சமய – சமூகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த மானியம் உதவியாக இருக்கும் என்று கடந்த பிப்ரவரி 7 வெள்ளிக்கிழமை இரவு ஆலய தைப்பூச திருவிழாவிற்கு வருகை மேற்கொண்ட அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அவ்வாறு தெரிவித்தார்.

கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயத்திற்கு வருகை மேற்கொண்ட அமைச்சர் வேதமூர்த்தி சாமி தரிசனம் செய்தார்.
அப்போது ஆலயத் தலைவர் கண்ணதாசன் தலைமையில் அமைச்சருக்கு சிறப்பு செய்யப்பட்டது. சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, சுகாதாரத் துறை அமைச்சர் சுல்கிப்ளி அகமட் , செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், புக்கிட் மெலாவாத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜுவைரியா சுல்கிப்ளி ஆகியோர் உள்ளிட்ட பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

ஆலய உட்பிரகாரத்தின்போது சாமி சிலையை சுமந்த அமைச்சர் பொன்.வேதமூர்த்தி, வள்ளி-தெய்வானை சமேதிரராய் சுப்பிரமணியர் வீற்றிருந்த தேரையும் பக்தர்களுடன் இணைந்து வடம் பிடித்து இழுத்தார்.

பின்னர் ஆலயத்தில் செந்தமிழ் அரங்கம் என்ற பெயரில் அமைக்கப் பட்டுள்ள பல்நோக்கு மண்டபத்தின் சமய-சமூகப் பணிகள் குறித்து ஆலயத் தலைவர் விளக்கம் அளித்த நிலையில், மண்டபத்தின் வளர்ச்சிப் பணிக்காக மானியம் வழங்குவது பற்றி ஆலோசிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மலேசிய முன்னேற்றக் கட்சியின் சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேச பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட இந்த தைப்பூச நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here