டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தலைமையில் வெள்ளிரத ஊர்வலத்தின் போது பக்தர்களுக்கு ம.இ.கா அன்னதானம்

0
162

கோலாலம்பூர், பிப்.5- தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெறும் வெள்ளிரத ஊர்வலத்தின் போது மஇகா பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவிருக்கிறது.

நாடு தழுவிய நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி சனிக்கிழமை தைப்பூசக் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்து சமய நெறியோடு இந்த தைப்பூசத் திருநாளைக் நாம் கொண்டாட வேண்டும்.

இந்நிலையில் வழக்கம் போல ம.இ.கா பிப்ரவரி 6ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 10.00 மணி தொங்கி 10 ஆயிரம் பக்தர்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து அன்னதானம் வழங்கப்படவிருக்கிறது. இந்நிகழ்ச்சியினை மஇகாவின் உயர்மட்டத் தலைவர்கள் புடைசூழ, மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவரும், மஇகாவின் தேசியத் தலைவரும் மாண்புமிகு டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார் என்று மஇகாவின் தலைமைச் செயலாளர் டத்தோ எம். அசோஜன் கூறினார்.

மஇகா தலைமையகக் கட்டிடத்தின் முன்புறத்திலுள்ள, ஜாலான் ஈப்போ சாலையில் அமைந்திருக்கும் பெர்க்கிம் கட்டிடத்தின் முன்பு கூடாரங்கள் அமைக்கப்பட்டு பக்தர் பெருமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

கோலாலம்பூர் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து புறப்படும் அருள்மிகு முருகப்பெருமானின் வெள்ளிரதம் அதிகாலை 4.00 மணியளவில் மஇகா தலைமையகக் கட்டிடத்திற்கு வந்து சேரும். எனவே, சுற்றுவட்டாரத்திலுள்ள பக்தர்கள் அனைவரும் வருகை புரிந்து, அருள்மிகு முருகப் பெருமானின் அருள் பெற்றுய்யுமாறும் டத்தோ அசோஜன் கேட்டுக் கொண்டார்.

மஇகா தலைமையகம் இதுபோன்ற அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கடந்த 2010ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகின்றது.
நாட்டிலுள்ள மாநில மஇகாவும் அந்தந்த மாநிலத்திலுள்ள பிரசித்தப் பெற்ற கோயில்களில் இதுபோன்று தண்ணீர் பந்தல் அமைத்து அன்னதானம் வழங்குகிறது என்று கூறிய டத்தோ எம். அசோஜன், பேரா, ஈப்போ கல்லுமலை ஆலயம், கெடா, சுங்கைப்பட்டாணி அருள்மிகு சுப்ரமணியம் ஆலயம், பினாங்கு தண்ணீர்மலை ஆலயம் மற்றும் ஜோகூர் போன்ற அனைத்து மாநிலங்களிலும் மஇகா பொறுப்பாளர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து, பக்தர்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளையில், நமது சமயத் திருவிழாவாகக் கொண்டாடப்படும் இவ்விழாவினை இந்து சமய பண்பாட்டு மற்றும் நன்னெறியோடு கொண்டாட வேண்டுமென்று அனைத்து இந்துப் பெருமக்களும் தங்களது கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். குறிப்பாக, மற்றவர்கள் நம்மைப்பற்றி எந்தவொரு குறையும் கூறாதவாறு நடந்து கொள்ள வேண்டும் என்று வேண்டும் என்று டத்தோ அசோஜன் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here