தடுப்பு முகாமில் இருந்த சசிகுமாருக்கு டிரா மலேசியா பிறப்புப் பத்திரம் பெற்றுத் தந்தது

0
42

புத்ராஜெயா, பிப்.11-
அடையாள ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் காவல் துறையால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் நான்கு மாதங்களுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய இளைஞர் சசிகுமார் என்பவருக்கு டிரா மலேசியா முயற்சியில் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் உதவியில் பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை பெறப்பட்டுள்ளதாக டிரா மலேசியா தலைவர் சரவணன் சின்னப்பன் கூறினார்.

கடந்தாண்டு 10ஆம் தேதி நண்பர்களுடன் வெளியில் பேசிக் கொண்டிருந்த போது காவல் துறையால் கைது செய்யப்பட்ட சசிகுமார் என்பவர் அடையாள ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் காவல் துறை தடுப்பு காவலில் இருந்து தடுப்பு முகாமில் வைக்கப்பட்டார். இந்நிலையில் அவரது குடும்பத்தினர் டிரா மலேசியாவை தொடர்பு கொண்டதாக சரவணன் தெரிவித்தார்.

அதன்பிறகு சசிகுமாரை அவரது தயாருடன் சந்தித்துப் பேசினோம். இதன்வழி தாயாருக்கு பிறப்பு பத்திரம், அடையாள அட்டை இருப்பதும் மகனுக்கு அவர் எடுக்கத் தவறியதும் தெரியவந்தது. நாங்கள் சசிகுமாருக்கு ஆவணங்கள் திரட்டினோம். அவரது குடும்பத்தினர் மற்றும் உடன்பிறந்தர்களின் ஆவணங்களையும் திரட்டி புத்ராஜெயாவில் உள்ள தேசிய பதிவு இலாகாவில் பிறப்புப் பத்திரத்திற்கு விண்ணப்பத்தை வழங்கியதாக சரவணன் சொன்னார்.

தேசிய பதிவு இலாகாவில் விண்ணப்பம் செய்த 2 வாரத்தில் சசிகுமாரை நேர்முக பேட்டிக்கு அழைத்தார்கள். அதன்பிறகு சில நாட்கள் காத்திருக்கச் சென்னார்கள். பிறப்புப் பத்திரம் இருந்தால் மட்டுமே அவனை விடுதலை செய்ய முடியும் என்பதால் தாங்கள் பொறுமையாகக் காத்திருந்ததாக சரவணன் குறிப்பிட்டார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 10ஆம் நாள் ச சிகுமாருக்கு பிறப்புப் பத்திரம் கிடைத்தது. இதன் காரணமாக சசிகுமார் அன்றைய தினம் பிற்பகலில் தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று பிப்ரவரி 11 செவ்வாய்க்கிழமை சசிகுமாருக்கு அடையாள அட்டை விண்ணப்பத்தையும் வழங்கியதாக சரவணன் தெரிவித்தார்.

சசிகுமாருக்கு கூடிய விரைவில் அடையாள அட்டையும் பெற்றுத்தரப்படும். சசிகுமாருக்கு பிறப்புப் பத்திரம் பெற்றுத்தர டிரா மலேசியாவின் முயற்சிக்கு மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் உதவி நல்கினார். இன்று புத்ராஜெயாவில் மனிதவள அமைச்சில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் மனிதவள அமைச்சர் குலசேகரன், சசிகுமார் மற்றும் அவரது தாயாரிடம் பிறப்புப் பத்திரத்தை வழங்கியதாக சரவணன் தெரிவித்தார்.

அடையாள ஆவணங்கள் இல்லாத நிலையில் கைது செய்யப்படுபவர்கள் தடுப்பு முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் என்பதை தங்கள் பிள்ளைகளுக்கு பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை எடுக்காத பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சரவணன் சின்னப்பன் ஆலோசனை கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here