தாய்மொழி பேசுவதில் பெருமை கொள்ள வேண்டும்! அனைவருக்கு தாய்மொழி தின வாழ்த்துகள்! -பொன்.வேதமூர்த்தி

0
71

புத்ராஜெயா, பிப்.21
மலேசியக் குடிமக்கள் அனைவருக்கும் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை சார்பில் ‘உலக தாய்மொழி நாள்’ வாழ்த்தை தெரிவித்துக் கொள்தாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

உலகில் ஒருவர் எத்தனை மொழிகளைக் கற்றாலும் தன்னுடைய தாய்மொழியைப் போற்றுவதிலும் பேசுவதிலும்தான் பெருமை இருக்கிறது. இன்றைய அவசர உலகில் இரு வாரங்களுக்கு ஒரு மொழி வீதம் அழிந்து வருவதாக யுனெஸ்கோ புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

அதனால்தான் அனைவருக்கும் தாய்மொழிமீது பற்றும் விழிப்புணர்வும் ஏற்படுவதற்காக பிப்ரவரி மாதம் 21-ஆம் நாளை உலக அளவில் தாய்மொழி தினமாக ஐ
நா மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பு 1999-இல் பிரகடனம் செய்ததுடன், அதை ஆண்டுதோறும் கொண்டாடியும் வருகிறது.

2020-ஆம் ஆண்டு தாய்மொழி தின கருப்பொருளாக, வட்டார மொழிகளும் உலக நாடுகளின் எல்லையோர மொழிகளும் இணைந்து உலக அமைதிக்கும் பலதரப்பட்ட பண்பாட்டு மேன்மைக்கும் துணையாக விளங்க முடியும் என்று யுனெஸ்கோ மன்றம் அறிவித்துள்ளது. இதை, பல மொழி பேசும் மலேசிய மக்கள் கவனத்தில் கொள்வதுடன், தேச ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மலேசிய மக்களிடம் தாய்மொழி குறித்த விழிப்புணர்வு இயல்பாகவே இருந்தாலும் அண்மைய ஆண்டுகளில் தாய்மொழி நாளைக் கொண்டாடி தங்களின் தாய்மொழிப்பற்றை மேலும் வளர்த்து வருகின்றனர். இது பாராட்டிற்கு உரியது. மீண்டும் அனைவருக்கும் தாய்மொழி நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவருமான பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here