பொன்.வேதமூர்த்தி தலைமையில் பத்துமலையில் ஒற்றுமை பொங்கல் மூவினத்தவரும் கலந்து சிறப்பித்தனர்

0
32

பத்துமலை, பிப்.3-
பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமுர்த்தி தலைமையில் நேற்று பிப்ரவரி 2 ஞாயிற்றுக்கிழமை பத்துமலையில் நடைபெற்ற தேசிய பண்பாட்டு பொங்கல் கொண்டாட்டத்தில் மாணவர்கள், போட்டியாளர்கள், பொதுமக்கள், ஊடகத்தினர், சமூக ஆர்வலர்கள் என மூவின மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

பிரதமர் துறையின் ஒற்றுமைத் துறை ஏற்பாட்டிலும் சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத் துறை, கல்வித் துறை, தேசிய பண்பாடு மற்றும் கலைத்துறை, மலேசிய இந்து இளைஞர் இயக்கம், கெப்பிமா என்னும் இந்திய முஸ்லிம் இளைஞர் இயக்கம், சிலாங்கூர் தலைமையாசிரியர் மன்றம், ஆர்.டி.எம், கோம்பாக் மாவட்ட தலைமை காவல் நிலையம், டிஎன்பி, மின்னல் வானொலி, ஊடகத் துறையினர், உட்பட பல்வேறு தரப்பினரின் ஆதரவிலும் பத்துமலை கியோவ் பின் சீனப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழா நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப் பாட்டு உணர்வைப் பிரதிபலித்தது.

மூவினம் சம்பந்தப்பட்ட பண்பாட்டு-கலாச்சார போட்டிகளும் இவ்விழா தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டன. 40 குழுவினர் பங்குபெற்ற பொங்கல் சமைக்கும் போட்டி, 22 குழுவினர் கலந்து கொண்ட கோலப் போட்டி, 80 பேர் கலந்து கொண்ட தோரணம் கட்டும் போட்டி, 75 பேர் கலந்து கொண்ட பூச்சரம் தொடுக்கும் போட்டி, 10 குழுவினர் கலந்து கொண்ட தங் லூங் தயாரிக்கும் போட்டி, 12 குழுக்கள் பங்கு கொண்ட பட்டம் தயாரிக்கும் போட்டி, 54 சிறார்களும் 13 வயதுக்கு மேற்பட்ட 105 பேரும் பங்குபெற்ற இரு ஓவியப் போட்டிகளில் வென்ற குழுவினருக்கும் தனிப்பட்டவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில் அமைச்சர் உரி அடிக்கும் போட்டியில் கலந்து கொண்டு உரியை அடித்து நிகழ்ச்சியில் கலகலப்பை ஏற்படுத்தினார்.

நாட்டுப் பண்ணுடன் முறையாக தொடங்கிய நிகழ்ச்சியில் பல்வேறு கலைப் படைப்புகளைத் தொடர்ந்து மலேசிய இளைஞர் மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் ஜுஃபித்ரி ஜோகா வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி, பொங்கல் திருநாள் தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வந்த வேளையில், தற்பொழுது மூவின மக்களும் ஒன்றாகக் கொண்டாடும் பண்பாட்டு விழாவாகவும் ஒருமைப்பாட்டு நிகழ்ச்சியாகவும் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கின்றது என்று பேசினார்.

முக்கியமான இந்தக் காலக் கட்டத்தில் அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பொங்கல் நிகழ்ச்சியில் அனைத்து இன மக்களும் கலந்து கொண்டு தங்களின் தேசிய உணர்வை வெளிப்படுத்தியது பாராட்டுக்கு உரியது என்றும் அமைச்சர் தன்னுரையில் குறிப்பிட்டார்.

அனைவருக்கும் கரும்புச் சாறும் பகல் உணவும் பரிமாறப்பட்ட இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர் சந்திப்பின்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு, குறிப்பாக கொரோனா கிருமி, பொங்கல் விழா குறித்தெல்லாம் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி விளக்கம் அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here