மலேசிய மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு வரலாற்றில் இடம்பிடித்தார் முக்கிய அமைச்சர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்

0
159

கொழும்பு, பிப்.12-
உலக வரைப்படத்தில் முக்கிய இடம்பிடித்துள்ள இலங்கைக்கு மலேசிய மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது மலேசிய பேராளர் குழுவுடன் 3 நாட்கள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

தேசிய முன்னனி காலத்தில் மேலவைத் தலைவராக பதவி ஏற்ற டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின் போது அப்போது பிரதமராக டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சார்பில் லண்டன் பயணம் மேற்கொண்டு வரலாற்றில் முத்திரை பதித்தார். அதன் பிறகு நம்பிக்கை கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகும் கனடா, ஒட்டாவாவில் நடைபெற்ற மேலவைத் தலைவர்களுக்கான மாநாட்டில் பங்கேற்று உலக அரங்கில் மலேசியாவிற்கு பெருமை சேர்த்திருந்தார்.

இந்நிலையில் நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு வரலாற்றில் முத்திரை பதித்துள்ளார் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன். ம.இ.கா தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் நேற்று பிப்ரவரி 11 செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு பயணமானார்.

டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் இன்று இலங்கையின் தகவல், ஊடகம், உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி துறை அமைச்சர் பண்டுலா குணவர்த்தனே அவர்களை மரியாதை நிமித்தம் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பின் போது டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பல விவகாரங்கள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடினார்.

அதன்பிறகு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நீதி, மனித உரிமை, சட்டத்துறை சீர்திருத்த துறை அமைச்சர் நிமல் ஸ்ரீபாலா டி சில்வா அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார். மேலும் மகளிர், குழந்தைகள், சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதார, உள்நாட்டு மருத்துவ சேவை அமைச்சர் திருமதி தேவி வன்னியராச்சி அவர்களையும் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினார். இந்த மூன்று இலங்கை அமைச்சர்களுடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகும்.

இந்த வருகையின் வழி இலங்கைத் தமிழர்கள், தமிழ் சார்ந்த அமைப்புகளுடன் ஒரு வலுவான உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களோடு ம.இ.கா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், செனட்டர் டத்தோ ஆனந்தன், எம்.ஐ.இ.டி தலைமை நிர்வாக அதிகாரி மும்தாஜ், டத்தின் படுக்கா கோமளா கிருஷ்ணமூர்த்தி, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here