முவாட்சாம் ஷா புக்கிட் பீரு பூர்வகுடி கிராமம் அரசிதழில் பதிவுபெற நடவடிக்கை

0
45

  • பொன்.வேதமூர்த்தி

ரொம்பின், பிப்.21-
பூர்வகுடி மக்களின் மேம்பாட்டில் தொடர்ந்து முனைப்பு காட்டிவருகின்ற மத்திய அரசு, இங்குள்ள முவாட்சாம் ஷா பகுதியில் அமைந்துள்ள புக்கிட் பீரு வனப் பகுதியை பூர்வகுடி மக்களின் பாரம்பரிய கிராமமாக அரசிதழில் பதிவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண் டுள்ளது என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்தார்.

முவாட்சாம் ஷா பட்டணத்தை ஒட்டியிருக்கும் கழிவுப் பொருள் சேமிப்பு இடத்திலிருந்து மறுசுழற்சிப் பொருட்களை சேகரிப்பதற்காக பூர்வகுடி மக்கள் அன்றாடம் வருகின்றனர். சரியான பாதை வசதி இல்லாத நிலையில் தங்களின் கிராமத்தில் இருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் பயணித்து இங்கு வருகின்றனர்.

இங்கு, பூர்வகுடி மக்கள் வசிக்கின்ற இடம் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், நிலப் பதிவு மற்றும் பராமரிப்புப் பணிகள் மாநில அரசின் நிருவாகத்தில் இருப்பதால், பூர்வகுடி மக்கள் வாழும் இடம் குறித்த சிக்கலை முழுமையாக களைவதற்கான முயற்சியை மாநில ஜகோவா அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் இங்கு தெரிவித்தார்.

நிலப் பிரச்னை தீர்க்கப்பட்டு அரசாங்க இதழில் பதிவு செய்தபின், புக்கிட் பீரு பூர்வகுடி கிராமத்திற்கான சாலை வசதி, நீர் மற்றும் மின் விநியோகம் யாவும் ஏற்படுத்தப்படும். இதற்கிடையில், தண்ணீர் வாகனத்தின் மூலம் வாராந்திர அடிப்படையில் நீர் விநியோகம் செய்வதற்கான பணியை மாநில ஜக்கோவா(அஸ்லி மேம்பாட்டுத் துறை) மேற்கோண்டுள்ளது என்றார்.

சூரியக் கதிர் மூலம் மின் உற்பத்தி செய்து, அதை இந்தப் பூர்வகுடி கிராமத்திற்கு தொடர்ந்து வழங்குவதற்கான நிறுவனத்தை அடையாளம் காணும் முயற்சியும் அரசத் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூல நலத்துறை அமைச்சருமான பொன். வேதமூர்த்தி இங்குள்ள பூர்வகுடி மக்களை சந்தித்தபின் செய்தியாளர்களிடையே பேசியபோது குறிப்பிட்டார்.

பூர்வகுடி மக்கள் தங்களின் பகுதி நேர வருமானத்திற்காக, கழிவுப் பொருள் சேமிக்கப்பட்டுள்ள இடத்தில் மறுசுழற்சிப் பொருட்களைத் தேடும் நடவடிக்கை சுகாதார காரணத்திற்காக தடைசெய்யப் பட்டுள்ளது. அதேவேளை, அஸ்லி மக்கள் தங்களின் வருமானத்தை நல்ல முறையில் அதிகரிப்பதற்காக பொருத்தமான விவசாய நடவடிக்கை குறித்தும் திட்டமிடப்படுகிறது.

அத்துடன், பள்ளி செல்லாத பிள்ளைகள் கல்வி பெறுவதற்கான நட-வடிக்கையை ஜக்கோவா மேற்கொண்டு வருகிறது. இதில், சம்பந்தப்-பட்ட பிள்ளைகளின் போக்குவரத்து சிக்கலும் கவனத்தில் கொள்ளப்-பட்டுள்ளது என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

செம்மண் பகுதி என்பதாலும் மழை பெய்திருந்ததாலும் சம்பந்தப்பட்ட பூர்வகுடி கிராமம் சேரும் சகதியுமாக இருந்தது. தவிர, குப்பை சேர்ந்து துர்நாற்றமும் வீசியதால் அங்கு செல்வதைத் தவிர்க்கும்படி அமைச்ச-ருக்கு சொல்லப்பட்டது. ஆனாலும் நிலைமையை நேரில் கண்டறிய விரும்பிய அமைச்சர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பூர்வகுடி மக்களை நேரில் சந்தித்து, அவர்களுடனேயே அமர்ந்து கலந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியாளர்க் கூட்டத்தில் பூர்வகுடி மக்கள் சார்பில் கலந்து கொண்ட 52 வயதான ஜமிடா என்பவர், ஏறக்குறைய 10 ஆண்டுகளாக இங்கு வசிப்பதாகவும் பிரதான சாலைக்கு அருகில் இருக்கும் இந்த இடம் எங்களுக்கு உறுதி செய்யப்பட்டால் வசதியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். 31 வயதான லியான் என்பவர், இந்தக் குடியிருப்புப் பகுதி எங்களுக்கு உறுதிசெய்யப்பட்டால் மகிழ்ச்சி அடையும் அதேவேளை, விவசாயம் செய்யவும் காத்திருப்பதாக செய்தியாளர்களிடம் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here