கோவிட் 19 எதிரொலி இந்தியா திரும்ப முடியாமல் தவிக்கும் இந்திய பயணிகளுக்கு பிரதமர் மோடி உதவ வேண்டும் புரட்சி இயக்கத் தலைவர் உமாகாந்தன் வேண்டுகோள்

0
65

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 22-
கோவிட் 19 நோய் தொற்று காரணமாக விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால்
இந்தியா திரும்ப முடியாமல் தவிக்கும் இந்திய பயணிகளுக்கு பிரதமர் மோடி உதவ வேண்டும்
புரட்சி இயக்கத் தலைவர் உமாகாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மலேசியாவிற்கு சுற்றுலா வந்த இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கான மற்றும், வட மாநிலங்களைச் சேர்ந்த 289 இந்திய பயணிகள் கடந்த மார்ச் 17ஆம் தேதி நாடு திரும்ப கோலாலம்பூர் இரண்டாவது விமான நிலைய முனையம் மற்றும் அனைத்துலக விமான நிலையம் வந்த போது தங்கள் விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கி வரும் உமாகாந்தன் தேசம் ஊடகத்திடம் தெரிவித்தார்.

இந்தியா திரும்ப முடியாமல் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கடந்த நான்கு நாட்கள் பரிதவித்து வந்த அவர்களுக்கு சில பொது அமைப்புகளின் ஒத்துழைப்புடன் தேவையான உதவிகள் வழங்கி வந்துள்ள உமாகாந்தன், கோவிட் 19 நோய் தொற்று காரணமாக பாதுகாப்பு கருதி இந்தியாவிற்கான விமானச் சேவைகளுக்கு தடை விதித்திருந்தது சரி என்றாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய தூதரகம் மூலம் உதவி வழங்கியிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் தவித்த இப்பயணிகள் நேற்று சனிக்கிழமை நான்கு குழுவாக பிரிக்கப்பட்டு கோலாலம்பூர், பூச்சோங்கில் உள்ள சீக்கிய ஆலயங்கள், தனி வீடுகள், தங்கு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து வருவதாக உமாகாந்தன் சொன்னார்.

இந்திய தூதரகம் நிலைமையை விசாரிக்க வந்த போதும் அவர்களால் மேல் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இந்திய அரசாங்கம் கோவிட் 19 நோய் தொற்று குறித்த பயத்தில் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்கள் அடுத்த அழைப்பு வரும் வரையில் இந்தியா திரும்ப முடியாது. எனினும் இது தொடர்பில் பிரேம் என்பவர் இந்திய தூதரகத்திடம் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக உமாகாந்தன் குறிப்பிட்டார்.

இந்த இந்தியப் பயணிகளுக்கு மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் டத்தோ மாலிக், மலேசிய தெலுங்கு சங்கத் தலைவர் டத்தோ காந்தராவ், சுபாங் ரோட்டரி கிளப், மெர்சி மலேசியா, மிஸ்வா மலேசிய இந்திய மாணவர்கள் சமூகநல இயக்கம், பிகேஎஸ்எம் எனப்படும் சுகாதார தொண்டூழிய இயக்கம் ஆகியவை உதவி வழங்கியுள்ளதாக உமாகாந்தன் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here