டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் இருவருக்கும் குவியும் பாராட்டுக்கள்

0
94

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 22-
கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழ்நாடு, திருச்சி மற்றும் சென்னையில் சிக்கிக் கொண்ட பயணிகள் பாதுகாப்பாக நாடு திரும்ப காரணமாக இருந்த ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ எம்.சரவணன் இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்த பயணிகளை மீட்க ம.இ.கா 10 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி செலவில் ஏற்பாடு செய்த 6 ஏர் ஆசியா சிறப்பு விமானங்களில் இரண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 369 பயணிகளுடன் பாதுகாப்பாக நாடு திரும்பியது. அங்குள்ள எஞ்சிய பயணிகள் நாளை அல்லது நாளை மறுநாள் தாயகம் திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ம.இ.கா மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்பதற்கு தக்க சான்று இந்நடவடிக்கை என்று நாடு திரும்பியவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ம.இ.கா தங்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளதாகவும் இனி எப்போதும் தங்களுக்கு ம.இ.காதான் என்றும் தங்களை பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வந்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் டத்தோஸ்ரீ சரவணன் இருவருக்கும் நாடு திரும்பியவர்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

கோலாலம்பூர் விமான நிலைய இரண்டாவது முனையத்தில் இருந்து மார்ச் 21 சனிக்கிழமை இரவு 9.45 மணியளவில் சென்ற AK11 ஏர் ஆசியா ஏ320 ரக விமானம் சென்னையில் இருந்து இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவு 10.25க்கு புறப்பட்டு மார்ச் 22 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.50 மணியளவில் கோலாலம்பூர் வந்து சேர்ந்தது.

அதேநேரத்தில் கோலாலம்பூர் இரண்டாவது முனையத்தில் இருந்து மார்ச் 21 சனிக்கிழமை இரவு 8.45க்கு திருச்சிக்குப் புறப்பட்ட ஏர் ஆசியா விமானம் இந்திய நேரப்படி இரவு 10.30க்கு அங்கிருந்து புறப்பட்டு மார்ச் 22 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் கோலாலம்பூர் வந்தடைந்தது.

ஏர் ஆசியா சிறப்பு விமானம் வாயிலாக சென்னை, திருச்சியில் இருந்து நாடு திரும்பிய 369 பயணிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் காணப்பட்டனர். மலேசிய பயணிகளை மீட்க ம.இ.கா மேற்கொண்ட இந்த தீவிர முயற்சிக்கு ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இருவரும் அல்லும் பகலும் பாடுபட்டுள்ளதை தங்களால் உணர முடிகிறது என்று பயணிகள் விவரித்தனர்.

இந்த மீட்பு நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்ட மேலும் நான்கு விமானங்கள் நாளை அல்லது நாளை மறுநாள் சென்னை, திருச்சிக்கு சென்று எஞ்சிய பயணிகளை இங்கு கொண்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here